DAXSLY – அன்புள்ள முதல்வருக்கு, ஆனந்தி எழுதுவது …

10.05.2011 : ஐயா, வணக்கம்! ஆத்தூரை அடுத்துள்ள தலைவாசல் கூகையூர் கிராமத்தைச் சேர்ந்த, 104 வயதான உரைநூல் பேராசிரியர் அடிகளாசிரியருக்கு, மத்திய அரசு தொல்காப்பியர் விருதும், பணமுடிப்பும் அறிவித்து, அதன்படியே கொடுத்தும் விட்டது; சந்தோஷம்! இதுபற்றி தாங்கள் அடைந்த புளகாங்கிதத்தையும், பகிர்ந்து கொண்டீர்கள்; ரொம்ப சந்தோஷம்!

ஆனால், 2000வது ஆண்டில், நீங்கள் அறிவித்த, திருவள்ளுவர் விருது, பணம், இன்னமும் பலருக்கு வரவில்லையே ஐயா! மிக நீண்ட இடைவெளி காரணமாக, இந்த விருது பற்றி கிடைத்தவர்கள் கூட மறந்து இருக்கலாம்; ஆகவே, ஞாபகப்படுத்துகிறேன்.

கன்னியாகுமரியில், 2000வது புத்தாண்டு தொடக்கத்தில், 133 அடி உயர பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை, முதல்வராக இருந்து, திறந்து வைத்தீர்கள். அந்த விழாவில், பள்ளி சிறுவர், சிறுமியர் பலர் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்ததுடன், குறளின் கடைசி வரியை சொல்லி, அக்குறளை சொல்லச் சொன்னால் கூட, முழுக் குறளையும் சொல்லி, பொருளும் கூறினர். 133 அதிகாரத்தில், எந்த இடத்தில், அந்த குறள் இடம் பெறுகிறது என்றும் சொல்லி வியக்க வைத்தனர்.

இப்படி குறளை கரைத்து குடித்த, அந்த சிறுவர், சிறுமியரால், சபை மட்டுமல்ல, நீங்களும் சந்தோஷமடைந்தீர்கள். இந்த குழந்தைகள் படித்து முடிக்கும் வரை, மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்து, கைத்தட்டலையும் அள்ளினீர்கள். அந்த குழந்தைகளும், மாதம் ஆயிரம் ரூபாய் சன்மானம், இந்த மாதம் வரும், அடுத்த மாதம் வரும் என்று காத்திருந்து, காத்திருந்து கிட்டத்தட்ட, 12 வருடமாகிறது; இன்னும் தொகை வந்தபாடில்லை. குழந்தைகள் வளர்ந்தும் விட்டனர்; பலர், இதை மறந்தும் விட்டனர்!

ஆனால், இன்னமும் மறக்காத, அப்பாவி அப்பா ஒருவர், இதை ஞாபகப்படுத்தி, இப்போது அரசுக்கு கடிதம் போட்டார். மாதா, மாதம் ஆயிரம் ரூபாய் தருமளவிற்கு அரசிடம் நிதி கொட்டியா கிடக்கிறது? மொத்தத்தில் தொகுப்பூதியமாக ஒரு தொகை, பத்தாயிரமோ அல்லது கொஞ்சம் கூடுதலாகவோ தருவதற்கு ஆலோசனை நடந்துகொண்டு இருக்கிறது. ஆலோசனை முடிந்ததும், சொல்லி அனுப்புகிறோம் என்ற ரீதியில் பதில் அனுப்பியுள்ளார்கள்.

அரசிடம் நிதி கொட்டியா கிடக்கிறது, மாதா, மாதம் ஆயிரம் ரூபாய் தருவதற்கு என்று காட்டமாக எழுதிய கடிதத்தின் மை உலர்வதற்கு முன், யாரும் கேட்காமல், எவரும் வற்புறுத்தாமல், இந்திய கிரிக்கெட் அணிக்கு நான்கு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஆயிரத்தை விட, கோடி சிறிதா அல்லது திருக்குறள் ஒப்புவித்த சிறுவர்களை விட, கிரிக்கெட் வீரர்கள் சிரமத்தில் இருக்கின்றனரா? தெரியவில்லை… அனேகமாக, கடிதம் கிடைக்கப்பெற்ற, அந்த அப்பாவி அப்பா, மகனிடம், "இனி, திருக்குறளை விழுந்து, விழுந்து படிப்பே…’ என, கேட்டு புளிய விளாறால் விளாசி இருக்கலாம்.

இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை, 65 லட்சத்திற்கு வாங்குவதற்கு காட்டிய அக்கறையை, ஏன் இதில் காட்டவில்லை என, சம்பந்தபட்ட அதிகாரிகளை, நீங்கள் ஒரு வார்த்தை கேட்கலாமே ஐயா!

அதென்ன ஆட்சிப்பணியாளர்களுக்கு இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, 65 லட்சத்திற்கு கொடுக்கின்றனர் என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்… "அப்பழுக்கற்ற சமூக சேவையாளர்கள்’ என்ற அமைச்சர் சிபாரிசோடு, கடிதம் கொண்டுவரும் கரைவேட்டி கட்டியவர்களுக்கும், குடும்பத்தார்களுக்கும், முன் தேதியிட்டு வீடுகளை ஒதுக்கிக்கொடுத்த ஆட்சிப்பணியாளர்களுக்கு நாமும், நமக்காக ஏதாவது செய்துகொள்ளவேண்டும் என்று யோசித்ததன் விளைவே இந்த வீடு கட்டும் திட்டம்.

எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம், "எங்களுக்கு சம்பளம் போதவில்லை’ என்று தீர்மானம் நிறைவேற்றி, தங்களுக்கான சம்பளத்தையும் தாங்களே நிர்ணயம் செய்து, அதையும் முன்தேதியிட்டு பெற்றுக்கொண்டனரோ, அதே போல வீடு வாங்குவது என்று முடிவானதும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்குவற்கான விதிமுறைகளையும், இவர்களுக்கு ஏற்ப இவர்களே, வளைத்துக்கொண்டனர்.

தமிழகத்தின் எந்த மூலையிலும் தன் பெயரிலோ, குடும்பத்தார் பெயரிலோ வீடோ , நிலமோ இருந்தால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள் வாங்க முடியாது என்பது அடிப்படை விதி, ஆனால் இவர்களுக்கு அந்த விதி கிடையாது.

இதனால் அண்ணா நகரில் ஒரு வீடும், முகப்பேரில் மூன்று வீடும் வைத்திருக்கும் அதிகாரிகள் கூட, இந்த இரண்டரை கோடி ரூபாய் பெறுமான வீட்டிற்கு விண்ணப்பித்தனர். சந்தன வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டதற்காக, விலை மதிக்கமுடியாத நிலத்தை இலவசமாக வாங்கியவர்கள் கூட, இதற்கு விண்ணப்பித்து இருந்தனர். ஒரே தகுதி, தமிழகத்தில், ஐ.ஏ.எஸ்., அல்லது ஐ.பி.எஸ்., ஆக இருக்க வேண்டும். "இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை, 65 லட்சத்திற்கு வாங்குவது முறையாகத் தெரியவில்லையே’ என்று, இவர்கள் யோசித்து, "வேண்டாம்’ என்று சொல்லவில்லை.

டில்லியில் சமூக நல அமைப்பு ஒன்று, ஒரு கோடி ரூபாயும், தாகூர் விருதும் வழங்க முன்வந்தபோது, "அதைப்பெறும் தகுதி எனக்கில்லை, இதற்காக பணம் பெறுவதும் முறையுமில்லை’ என்று சொல்லி, ஒரு கோடியையும், விருதையும் வேண்டாம் என்ற அன்னா ஹசாரேவைப் போல எல்லாரும் இருக்கமுடியாதுதானே!

நன்றி!

இப்படிக்கு, ஆனந்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s