Yentily – வீட்டுச் சமையல் எரிவாயு சி லிண்டர் Gas cylinder

ரூ.6 லட்சத்துக்கும் அதிகமான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை விலக்கிக்கொள்வது பற்றி மத்திய அமைச்சர்கள் குழு விவாதித்துள்ளது. இதன்படி, இக்குடும்பத்துக்கு ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் அளிப்பது என்றும், அதற்குக் கூடுதலாகப் பெறும் சிலிண்டர்களை முழுத் தொகையைச் செலுத்தி மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தால் என்ன என்று அரசு சிந்திப்பதாகத் தெரிகிறது.

அதாவது இப்போது ரூ.642 விலையுள்ள வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் (14.2 கிலோ) ரூ.395-க்கு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதை ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் என்று கட்டுப்படுத்துவதன் மூலம், கள்ளச் சந்தையை ஒழித்துவிடலாம் என்று அமைச்சர்கள் குழு கூறுவதும், ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 20 சிலிண்டர்கள் பயன்படுத்துகின்றன என்று தெரிவித்திருக்கும் கருத்தும் மத்திய அமைச்சரவையும், நமது அதிகாரவர்க்கமும் எந்த அளவுக்கு யதார்த்த நிலைமைகளிலிருந்து விலகிச் சிந்திக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

வீட்டு இணைப்பைப் பொறுத்தவரை, ஒரு நுகர்வோர் தனக்கு சிலிண்டர் விநியோகிக்கப்பட்ட நாள் முதல் 21 நாள்கள் முடிந்த பின்னர்தான் இன்னொரு சிலிண்டருக்குப் பதிவே செய்ய முடியும் என்று ஏஜன்ஸிகள் கூறுகின்றன. அப்படிப் பதிவு செய்தால், குறைந்தபட்சம் 10 நாள்களுக்குப் பிறகுதான் சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது. அதாவது ஒரு சிலிண்டருக்கு 30 நாள் ஆகிறது. இந்த வகையில் எந்த நுகர்வோராக இருந்தாலும் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே பெற்று வருகிறார்.

சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருதோடு, இந்த ஏஜன்ஸிகளுடன் மல்லுக்கட்டி மாய்ந்துபோன நுகர்வோர் – குறிப்பாக குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகிறவர் என்றால் – சமையல் எரிவாயு பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளும் வகையில், எலக்ட்ரிக் குக்கர், இன்டக்ஷன் ஸ்டவ் என்று சின்னச் சின்ன பயன்பாடுகளுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தவும், வெந்நீருக்கு சூரிய ஆற்றலைப் பயன்படுத்தவும் தொடங்கிவிட்ட இந்நாளில், ஒரு குடும்பம் சராசரியாக ஆண்டுக்கு 20 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெறுகின்றன என்று சொல்லும் அமைச்சர் குழு எந்த அளவுக்கு உண்மை நிலையைப் புரிந்துகொண்டு பேசுகிறது?

வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திருட்டுத்தனமாக வணிகப் பயன்பாட்டுக்காக ஒட்டல்கள், பலகாரக் கடைகள், வண்டிக்கடைகள், கல்யாண சமையல் வேலைகள், சில தொழிற்சாலைகள், கார்கள் ஆகியவற்றுக்காகத் திசைதிருப்பப்படுவதால்தான் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மிக அதிக அளவில் ஒவ்வொரு குடும்பமும் பயன்படுத்துவதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது என்கின்ற உண்மையையும் புரிந்துகொள்ளாமல் இருக்கும் மத்திய அமைச்சர்களை என்னவென்று சொல்வது?

வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் (19 கிலோ) விலை இப்போது ரூ.1,280. ஆனால், 14.2 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு விலை, மானியத்தின் காரணமாக ரூ.395. ஆகவே, சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் திசைதிருப்பி, வணிக சிலிண்டர்களில் நிரப்புகிறார்கள். இதைச் செய்யும் தொழில்நுட்பம் காஸ் விநியோகத்தில் உள்ள ஊழியர்களுக்கு அத்துப்படி. இவ்வாறு சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட வணிக எரிவாயு சிலிண்டர்களை (14.2 கிலோ) ஓட்டல்கள், தள்ளுவண்டிக் கடைகள், பலகாரக் கடைகள், கல்யாண மண்டபங்களுக்குக் குறைந்தது ரூ.800 முதல் அதிகபட்சமாக ரூ.1,000 வரை அந்தந்த நாளின் தேவைக்கேற்ப விலை நிர்ணயித்து விற்கிறார்கள்.

இது நமது பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளுக்குத் தெரிந்தே நடக்கும் துஷ்பிரயோகம்.

ஒரு சிலிண்டருக்குக் குறைந்தது ரூ.400 வீதம் ஒரு நாளைக்கு 25 சிலிண்டர்களை ஒரு காஸ் ஏஜன்ஸி திசை திருப்பினால் ஒரு நாளைக்கு ரூ.10,000 கிடைக்கும். ஊழியர்களுக்கும், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கும், உள்ளூர் வட்டாட்சியர்களுக்கும் உரிய பங்கைப் பிரித்துக்கொடுத்ததுபோக, இத்தகைய மோசடியில் ஈடுபடும் காஸ் ஏஜன்ஸிக்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 (குறைந்தபட்சம்) லாபம் கிடைக்கிறது என்பது நமது மத்திய அமைச்சரவைக்கும் அதிகாரிகளுக்கும் மட்டும்தான் தெரியாது.

இந்த மோசடியைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணெய் நிறுவன ஊழியர்களை முடுக்கிவிட வேண்டும். புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து, அத்தகைய அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்க வேண்டும். ஏஜன்ஸியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஆனால், அதையெல்லாம் செய்யாமல், ஆண்டுக்கு 4 சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் என்று சாதாரண மக்களிடம் தன் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது மத்திய அரசு.

வீட்டுச் சமையல் எரிவாயு இணைப்புப் பெற்ற குடும்பங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 1.18 கோடி. ஆனால், வணிக இணைப்பு பெற்ற நிறுவனங்கள் எத்தனை? அதுபற்றி இந்த எண்ணெய் நிறுவனங்களும் வெளிப்படையாகப் பேசுவதே இல்லையே, ஏன்?

ஒட்டல்கள், பலகாரக் கடைகள், வண்டிக்கடைகள், மெஸ்கள், கல்யாண சமையற்கூடங்கள் என எல்லா இடங்களிலும் சோதனை செய்து, அவர்கள் வணிக இணைப்புப் பெற்றவர்களா என்பதையும், அவர்கள் பாஸ்புத்தகத்தில் எப்போது கடைசியாக சிலிண்டர் வாங்கப்பட்டது, எத்தனை சிலிண்டர் வாங்கப்பட்டது, அந்த நிறுவனத்தின் அளவுக்கும் அவர்கள் வாங்கியுள்ள சிலிண்டர்கள் எண்ணிக்கை சரியா, அல்லது ஒப்புக்கு பாஸ்புத்தகம் வைத்துக்கொண்டு கள்ளச் சந்தையில் வாங்கி, வணிக சிலிண்டரில் நிரப்புகிறார்களா என்பதையெல்லாம் ஆய்வு செய்தால் அரசுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும். அதைவிடுத்து சாதாரண குடும்பங்கள் மீது நிதிச்சுமையை ஏற்றுகிறார்கள்.

ஏனென்றால், சாதாரண குடும்பங்கள் சிலிண்டரைக் கொண்டுவந்து போடும் ஊழியருக்கு மட்டும்தான் ரூ.10 "எக்ஸ்ட்ரா’ கொடுக்கின்றன. காஸ் ஏஜன்ஸிக்கும், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் போய்ச் சேருகிறார்போல கணிசமான லஞ்சத்தைக் கொடுக்க சாதாரண குடும்பங்களால் முடியாது. தங்களுக்கு எந்தவிதத்திலும் பயன்படாத மக்களுக்கு எதற்கு மானியம் என்று மத்திய அரசு கருதுகிறதோ என்னவோ?

வயிறு எரிகிறது…!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s