DAXSLY – Another article on Education by JM

என் சாவு, அரசு பள்ளியில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும், இல்லையானால் என்னை மாதிரி எத்தனை உயிர்களை ஆசிரியர்கள் எடுக்கப்போகிறார்களோ தெரியவில்லை…

திறமையான ஆசிரியர்கள் பலர் வேலையில்லாமல் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், மேல்நிலை வகுப்புகளுக்கு, நல்ல திறமையான ஆசிரியர்களை போடவேண்டும் என முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

பனைமரத்துப்பட்டி அரசுப்பள்ளியில் படித்த சீனிவாசன் என்ற மாணவன் தற்கொலை செய்துகொள்ளும் முன்னர் எழுதிவைத்துப்போன கடிதத்தில் உள்ள வரிகள் இவை. என்னைத் தனிப்பட்ட முறையில் மிகவும் அசைத்தது இது

ஓராண்டு முன் என் மகன் அரசுப்பள்ளியில் பிளஸ் டூ படிக்கும்போது சொன்னது நினைவுக்கு வருகிறது. ‘ஒரே ஒரு வாத்தியாரைத்தவிர மத்தவங்க சுத்தமா கிளாஸே நடத்துறதில்லை அப்பா. பேசாம வாசிச்சு விட்டுட்டுப் போறாங்க. டியூஷன் வச்சுப் படியுங்கலேன்னு சொல்றாங்க. எங்க கிளாஸிலே பத்துப்பதினைஞ்சு பயக ரொம்ப ஏழைங்க. சனி ஞாயிறெல்லாம் கூலி வேலைக்குப் போவாங்க. மாடும் வாழையும் எல்லாம் வச்சிருக்காங்க. சொந்தமா சம்பாரிச்சுப் படிக்கிறவங்க. அவங்கள்லாம் பெரிய ஸ்கூலுன்னு நினைச்சு சேர்ந்தவங்க. எங்கிட்ட பேசின ஒரு பையன் அழுதான். இப்பிடி சொல்லிக்குடுத்தா நான் எப்டி ஜெயிக்கிறது, பேசாம வெஷத்தை சாப்பிடலாம்னு தோணுதுன்னு சொல்றான்.’ சொல்லும்போதே அவனுக்குக் கண்ணீர் முட்டியது

அது இப்போது நடந்திருக்கிறது. யார் குற்றவாளிகள்? முதல் குற்றவாளி,தகுதிக்கு வேலை கொடுக்காமல் பணம் வாங்கிக்கொண்டு வேலைகொடுக்கும் கல்வித்துறை நிர்வாகமும்,அமைச்சகமும்தான். ஆனால் மிகப்பெரும்பாலான அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எந்தவிதமான பொறுப்பும் மனசாட்சியும் இல்லாத மானுடமிருகங்கள் என்பதே உண்மை. காசுள்ளவர்கள் வேறு பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். இல்லாதவர்களே தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். [நான் என் பையனுக்குப் பள்ளிக்கல்விமுறையே பெரிதாக ஒத்துவராத காரணத்தால், அரசுப்பள்ளிகளில் பாடமே நடத்த மாட்டார்கள் என்ற காரணத்தாலேயே , அங்கே அனுப்பினேன். அவனுடைய இயல்பு,தானாகவே படிப்பது]அந்தத் தட்டிக்கேட்க முடியாத ஏழைகளை மனசாட்சியில்லாமல் வஞ்சகம்செய்து வாழ்கிறார்கள்.

வகுப்பு கூடுமான வரை வராமலிருக்க, வந்தாலும் எந்தப் பாடமும் நடத்தாமலிருக்க, முயல்பவர்கள் இந்தப் பொறுக்கிகள். அதை நியாயப்படுத்தும் இடதுசாரி தொழிற்சங்க அரசியலுக்குக் கப்பம் கட்டிவிட்டுத் தங்கள் பக்கவாட்டு வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள். இவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இந்த அடித்தள மக்களிடமிருந்தே வந்தவர்கள். சென்ற தலைமுறையின் ஆசிரியர்களுக்கு ஓரளவுக்கு இருந்த மனசாட்சியாலும் அர்ப்பணிப்பாலும் கல்வி கற்க முடிந்தவர்கள். அந்த அடிப்படை எண்ணமே இவர்களிடம் இருப்பதில்லை.

இவர்களுக்கு ஒரு மறைமுக அதிகாரம் உண்டு. தேர்தல்களில் பெரும்பாலும் வாக்காளமைய பொறுப்பாளர்கள் இவர்கள். தேர்தல்களில் இவர்களால் மோசடிகளில் ஈடுபடமுடியும். இதை பயந்தே பெரும்பாலான அரசுகள் இவர்கள் மேல் கை வைப்பதில்லை. கை வைக்கத்துணிந்தவர் ஜெயலலிதா. அதனால்தான் அவர் அம்முறை ஆட்சி இழந்தார் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

சற்றுமுன் காலைநடை சென்றபோது ஓர் ஆசிரிய அற்பனிடம் பேசிவிட்டு வந்தேன். ‘ஏலே, துணிக்கும் சாராயத்துக்கும் காசு குடுக்குதேல்ல? காசுகுடுத்துப் படிலே..ஏன் கெவர்மென்டு பள்ளிக்கு வாறே? ’ என இறந்த மாணவனை வசைபாடினார் ‘வாத்தியரயா மாட்டிவிடுதே? அரெஸ்ட் பண்ணினானுகளாம். அரெஸ்ட் பண்ணி என்ன செய்வே? ஒரு மண்ணும் செய்யமாட்டே. நாட்டிலே இருக்க பெரிய யூனியன் எங்களுக்காக்கும். ஜெயலலிதாவுக்கு அதுக்க ருசி தெரியும்’ என்றான், அவர் ஒரு செந்தோழர்.

இந்தப் புல்லர்களை நம்பித்தான் இங்கே ’சமச்சீர்கல்வி’ என்றெல்லாம் பெரிய பேச்சுக்கள் பேசப்படுகின்றன. இன்று நம் கல்விமுறையின் மிகப்பெரிய பிரச்சினையே இந்த மாஃபியாதான். இவர்களை நெறிப்படுத்த ஓர் அமைப்பு இங்கே இல்லை. அதைச்செய்ய மனம் இல்லை. கண்துடைப்புக்காக சமச்சீர் கல்வி என்கிறார்கள். இன்று சமச்சீர் கல்விக்காகப் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஆசிரியப் புல்லுருவிகள்தான்.

தனியார் பள்ளிகளில் இதே சம்பளத்தில் பாதியைப்பெற்றுக்கொண்டு இரட்டிப்பு நேரம் கற்பிக்கிறார்கள். அங்கே சென்று புகார்செய்ய ஓர் இடம் இருக்கிறது. பிடிக்காவிட்டால் மாற்றிக்கொள்ள முடிகிறது. விளைவைக் காட்டிப் போட்டியில் நின்றாக வேண்டிய வணிகக்கட்டாயமாவது அவர்களுக்கு உள்ளது. சமச்சீர் கல்வி என்ற பேரில் அதற்கும் வேட்டு வைக்க நினைக்கிறார்கள்.

இந்தத் தற்கொலை ஒரு சுவர் எழுத்து. இனிமேலாவது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த யதார்த்ததை நாம் பார்க்க வேண்டும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s