தமிழ் – JM Article – Padmanabaswamy Treasure

அன்புள்ள நண்பர்களுக்கு

திருவனந்தபுரம் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து வருகிறேன். உண்மையில் இந்தப் பெரும் செல்வம் அங்கிருக்கும் என எவருக்கும் தெரியவில்லை. ஆகவே ஒட்டுமொத்தமாக ஓர் அதிர்ச்சியலை. இப்படிப் பெரும் செல்வம் இருக்கிறது என ஒருமாதம் முன்பு சொல்பவனைப் பாரம்பரியமேன்மை பேசும் இந்துத்துவவாதி என வசைய வந்திருப்பார்கள்.

[உத்ராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, இன்றைய மன்னர்]

இந்த நிகழ்வுகளின் பின்புலம் இது. மறைந்த மன்னர் சித்திரைத் திருநாள் பாலராமவர்மா அவர்கள்,திருவனந்தபுரம் பத்மநாபசாமிகோயிலில் கருவறைக்கு முன்னால் உள்ள ஒற்றைக்கல் மண்டபம் என்ற முகமண்டபத்தைப் பொன்வேயவேண்டும் என்ற கனவைக்கொண்டிருந்தார். அதற்கான நிதியை அவரால் உருவாக்க முடியவில்லை. அவரது ஆசையை நிறைவேற்ற இப்போதைய மன்னர் உத்ராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா மகாராஜா முயன்றார். அப்போது அவருக்கு ஓர் ஆலோசனை சொல்லப்பட்டது. ஆலயத்தில் கருவறை அருகே நிரந்தரமாகப் பூட்டியே இருக்கும் ஆறு ரகசிய அறைகளில் சிலவற்றில் அனந்தபத்மனாபனுக்குச் சொந்தமான பொன் இருப்பதாகவும் அவற்றை எடுத்து உருக்கிப் பயன்படுத்தலாமென்றும்.

மார்த்தாண்டவர்மா அதற்காக 2007ல் முயன்றார். அப்போது அது செய்தியாக வெளியே தெரியவே அப்படி செய்ய மன்னருக்கு உரிமையில்லை என்று வழக்கறிஞர் டி.பி.சுரேந்திரன் தலைமையில் நீதிமன்றத்தை அணுகினார்கள். அனந்தபத்மநாபசாமிகோயிலின் பரம்பரை அறங்காவலர் மன்னர்தான். ஆனால் கோயில் அவருக்குச் சொந்தமானதல்ல. இந்திய அரசின் சொத்து அது. ஆகவே டெல்லி உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

2011ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆலயத்தை அரசுடைமையாக்கவும், பொதுமக்கள், அரசு, நீதிமன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அந்த ரகசிய அறைகளைத் திறந்து பார்க்கவும் ஆணையிட்டது. அவ்வாறு திறந்தபோதுதான் உலக வரலாற்றின் மிகப்பெரிய நிதிக்குவைகளில் ஒன்று கிடைத்திருக்கிறது– இன்னும் ஓர் அறை திறக்கவேண்டியிருக்கிறது. புதியதாக ஓர் இரும்பறை தென்பட்டிருக்கிறது. ஒருவேளை உலகின் மிக அதிகமான நிதி சேகரிப்புள்ள ஆலயமாக திருவனந்தபுரம் ஆகக்கூடும்.

கவனிக்கவேண்டிய விஷயங்கள் இவை. பாலராமவர்மா மன்னருக்கும் சரி, இப்போதைய மன்னருக்கும் சரி இந்த பெரும்நிதிக்குவை பற்றி தெரியவில்லை. நகைகள் இருக்கலாமென ஓர் ஊகமிருந்திருக்கிறது, அவ்வளவே. மன்னர்குடும்பத்தில் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கண்டிப்பாகத் தெரிந்திருக்காது. எல்லாருக்குமே அதிர்ச்சிதான். [அய்யய்யோ கைவிட்டுப் போயிற்றே எனப் பலர் இரவுத்தூக்கத்தைத் தொலைக்கக்கூடும்.]

அப்படியானால் இவை எப்போது வைத்துப் பூட்டப்பட்டன? மதிலகம் ஆவணங்கள் எனப்படும் அரச ஆணைக்குறிப்புகளின்படி 1789 ல் திப்புசுல்தான் திருவிதாங்கூர் மேல் படையெடுத்து வந்தபோது அவரிடமிருந்து ஆலயச் சொத்துக்களையும் திருவிதாங்கூர் அரசாங்க கஜானாவையும் காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டு இவை கட்டப்பட்டன.

அப்போது மன்னராக இருந்தவர் தர்மராஜா என்றழைக்கப்பட்ட கார்த்திகைத்திருநாள் ராமவர்மா. அவரது அமைச்சராக இருந்தவர் நவீன திருவிதாங்கூரின் சிற்பிகளில் ஒருவரான ராஜா கேசவதாஸ். இவர் பேரில் இன்றும் கேசவதாஸ புரம், கேசவன் புத்தந்துறை போல பல ஊர்கள் குமரிமாவட்டத்தில் உள்ளன. இவரது திட்டமே இந்தப் பாதுகாப்பறைகள். 1789ல் நெடுங்கோட்டை போரில் ராஜா கேசவதாஸ் தலைமையில் திருவிதாங்கூர் படைகள் திப்புசுல்தானை வென்றன. சுல்தானுக்குக் காயம்பட்டது. ஆகவே திருவிதாங்கூருக்குள் அவரது படையெடுப்பு நிகழவில்லை.

இவ்வறைகளின் ரகசியத்தை தர்மராஜாவுக்கு பின்னால் வந்த பாலராமவர்மாவோ பிறரோ அறிந்திருக்கக்கூடுமா என்பதெல்லாம் மிகச்சிக்கலான கேள்விகள். ஏனென்றால் தர்மராஜா மகாராஜா தன் ஆட்சியின் இறுதிக்காலகட்டத்தில் தன் வாரிசான அவிட்டம் திருநாள் பாலராமவர்மாவை இளவரசுப்பட்டத்தில் இருந்து நீக்கினார். காரணம் இளவரசரின் ஊதாரித்தனமும் பெண்பித்தும். மூலம் திருநாள் கவிஞர், அறிஞர். ஆனால் இளவரசர் பால ராமவர்மா ஜெயந்தன் நம்பூதிரி,தச்சி மாத்து தரகன் என்ற சிரியன் கிறித்தவ வணிகர், தலக்குளத்து சங்கர நாராயண செட்டி என்ற தமிழர் அடங்கிய ஒரு தரகு கும்பலின் பிடியில் இருந்தார்.

தர்மராஜா கார்திகை திருநாள் ராமவர்மா மறைந்தபோது 16 வயது மட்டுமே ஆன அவிட்டம் திருநாள் பாலராமவர்மா அரண்மனைச்சதிகள் மூலம் ஆட்சிக்கு வந்தார். அவர் ராஜா கேசவதாசனை துரோகிப்பட்டம் சுமத்தி சிறையில் அடைத்து விஷமிட்டுக் கொன்றார். மூவர்குழுவால் அரசு சொத்துக்கள் பிரம்மாண்டமான அளவில் கொள்ளையடிக்கப்பட்டன.

தர்மராஜா காலகட்டத்தில் திப்புசுல்தானை பயந்து பிரிட்டிஷாருடன் திருவிதாங்கூர் ஓர் ஒப்பந்தம்போட்டுக்கொண்டது. அந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி அவிட்டம் திருநாள் ராமவர்மா காலகட்டத்தில் பிரிட்டிஷார் திருவிதாங்கூரை தங்களுக்கு கப்பம்கட்டும் அரசாக ஆக்கி ஒட்டச்சுரண்ட ஆரம்பித்தார்கள். கர்னல் வெல்லெஸ்லி தலைமையில் ஒரு நிரந்த பிரிட்டிஷ் ராணுவம் திருவிதாங்கூரில் நிலைகொண்டு ஓர் இணையான அரசாங்கத்தை நடத்தியது. மூவர்குழு கிட்டத்தட்ட நாட்டை பிரிட்டிஷாரின் காலடியில் வைத்தனர். பிரிட்டிஷார் வரிவசூலை ஏற்றிக்கொண்டே செல்ல ஒரு கட்டத்தில் திருவிதாங்கூரே போண்டியாகியது. அந்நிலையில்தான் மக்கள் வேலுத்தம்பி தளவாயின் தலைமையில் கொந்தளித்து எழுந்தார்கள். மூவர்குழு அழிக்கப்பட்டது.

ஆனால் மீண்டும் பிரிட்டிஷாரின் வரிவசூல் கொள்ளை உச்சத்தை அடைய அரசரின் சொத்துக்களை விற்று வரிகளைக் கட்டவேண்டிய நிலை வந்தது. மீண்டும் வேலுத்தம்பி தளவாய் கலகம் செய்தார். அவரது சுதேசிப்பிரகடனம் குண்டற என்ற இடத்தில் வெளியிடப்பட்டமையால் குண்டற விளம்பரம் என்றபேரில் புகழ்பெற்றுள்ளது. வேலுத்தம்பி தளவா கேரளத்தின் ஒரு சரித்திர நாயகன். அவரது கலகத்தை அடக்கி அவரை பிரிட்டிஷார் கொன்றார்கள். திருவிதாங்கூரின் ராணுவபலம் முழுமையாக அழிக்கப்பட்டது.

அதன்பின் சுதந்திரம் கிடைக்கும் வரை பிரிட்டிஷார் திருவிதாங்கூரை முழுமையாகச் சுரண்டி வந்தார்கள். பல சந்தர்ப்பங்களில் நிதி இல்லாமல் திருவிதாங்கூர் திவால்நிலைக்குச் சென்றிருக்கிறது. பிரிட்டிஷ் நிதிவசூல் கெடுபிடிகளை, மிரட்டல்களை, கிட்டத்தட்ட வழிப்பறிக்கொள்ளைக்குச் சமானமான பிடுங்கல்களை நாம் ஆவணங்களில் காணலாம். மன்னர்கள் கெஞ்சுகிறார்கள். மேலும் மேலும் கெடுநீட்டிக்கிறார்கள். முக்கால்வாசி பணம் கொடுத்து ஆசுவாசம் கொள்கிறார்கள். மிகையான வரிவிதிப்பால் அஞ்சுதெங்கு, ஆலப்புழா ஆகிய துறைமுகங்கள் படிப்படியாக அழிவதை மன்னர்கள் முறையிட்டு மன்றாடிச் சொல்கிறார்கள். ஆனால் பிரிட்டிஷார் திருவிதாங்கூரை அடிமாட்டுக்கு அனுப்பும் முன் கடைசியாகக் கறக்கும் பசுவாக நினைத்தனர்.

மூலம் திருநாள் மகாராஜா 1897ல் பேச்சிப்பாறை அணையைக் கட்ட முயன்றபோது நிதி இல்லாமல் அரசுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான சிறிய குளங்களை தமிழகத்தைச் சேர்ந்த தனியார் விவசாயிகளுக்கு வயலாக விற்று நிதி திரட்டினார். அரசர் நிலக்கிழார்களுக்கு எழுதிய கடிதங்கள் இன்றுகிடைக்கின்றன [பார்க்க .கா.பெருமாள் தொகுத்த முதலியார் ஆவணங்கள்] அதில் மன்னர் பணம் கேட்டு நிலக்கிழார்களிடம் கெஞ்சுகிறார். ‘நீங்கள் பணம் தந்தால்தான் அரண்மனையில் அன்றாடச் செலவு நடக்கும்’ என்று மன்றாடுகிறார். அரண்மனைக்கு வெண்ணை பால் கொடுத்த வகைக்கான கணக்குகள் பலகாலம் கடனில் இருப்பதை நாம் அந்த ஆவணங்களில் காணலாம். அரண்மனையின் சாதாரண விருந்துகளுக்காகக்கூட கடன் வாங்கப்பட்டிருக்கிறது.

இக்காலகட்டங்களில் இந்த நிதி இருப்பது தெரிந்திருந்தால் அது எஞ்சியிருக்காது. சதிகாரர்களோ பிரிட்டிஷாரோ தர்மம் பார்ப்பவர்கள் அல்ல. ஆக, ராஜா கேசவதாசனுக்கும் தர்மராஜாவுக்கும் மட்டும் தெரிந்த ஒரு ரகசியம் இது. திவான் சிறையில் இருந்து இறந்தபோது இந்த ரகசியத்தைத் தன்னுடன் கொண்டு சென்றார். எதிர்கால சந்ததிகளுக்காக அந்தச் செல்வத்தை அவர் பாதுகாத்து விட்டுச்சென்றார் என்றே சொல்லலாம். அதுவே இப்போது திரும்ப வந்திருக்கிறது.

இன்னொரு தகவல். 165 வருடம் முன்னர் அரசி கௌரி பார்வதிபாய் [சுவாதி திருநாள் மகாராஜாவின் அம்மா] காலகட்டத்தில்தான் கடைசியாக இது நிரந்தரமாக பூட்டப்பட்டது, அதற்கு முன்னர் அவ்வப்போது ரகசியமாக திறந்து பார்க்கப்பட்டிருக்கலாம் என்பதே உண்மை. மருமக்கள் வழி கொண்ட திருவிதாங்கூர் அரசகுலத்தில் தர்மராஜாவுக்குப்பின் அவரது மருமகள்களுக்கு மட்டும் தெரிந்திருந்த ரகசியத்தை அவர்கள் அதன் பின் வந்த ஆண்களிடம் சொல்லாமலே விட்டிருக்கலாம், அவை பிரிட்டிஷார் கைகளுக்குச் செல்லக்கூடாது என்பதற்காக.

திருவிதாங்கூர் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா அரசுகளும் வளமான அரசுகளாகவே இருந்திருக்கின்றன என்பதே வரலாற்று உண்மை. அதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். பருவமழையை நம்பி இருக்கும் இந்தியாவில் அரசுகளும் மக்களும்கூட சேமிப்பை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்கள். தங்கம் அந்த சேமிப்புக்கான நாணயமாக இருந்தது. ஆலயங்கள் சேமிப்பு மையங்கள். அவை மாபெரும் பஞ்சம்தாங்கும் அமைப்புகள். அந்த ஒட்டுமொத்த அமைப்பே 1750களுக்கு பின் பிரிட்டிஷாரால் இருநூறாண்டுக்காலம் கொள்ளையிடப்பட்டது. அதன் விளைவே இந்தியாவை சூறையாடிய மாபெரும் பஞ்சங்கள்.

இந்தியாவை பிரிட்டிஷார் எந்த அளவுக்கு சூறையாடிக் காலியாக்கினார்கள் என்ற வரலாற்று உண்மை இன்னமும் பேசப்படாத ஒன்றாகவே உள்ளது. ஐரோப்பியச் சார்புள்ள வரலாற்றாசிரியர்களே நமக்குள்ளனர். அவர்களே இங்கே நிறுவனங்களை ஆள்கின்றனர். அவர்கள் எப்போதுமே பிரிட்டிஷாருக்கு நற்சான்றிதழ் அளித்தே வரலாற்றை எழுதுகிறார்கள். இந்தியாவுக்கு நவீன வளர்ச்சித் திட்டங்கள் மூலம் நிதிவளர்ச்சியை பிரிட்டிஷார் கொண்டுவந்தார்கள் என்று சொல்லும் அடிமை வரலாற்றாய்வாளர்களும் இருக்கிறார்கள்.

என்ன வருத்தம் என்றால் பிரிட்டிஷ் குடிமகனாக இருந்தவரும் அடிப்படையில் ஐரோப்பியமையநோக்கு கொண்டவருமான கார்ல் மார்க்ஸ் கூட பிரிட்டிஷார் வருவதற்கு முந்தைய இந்தியா அரைபப்ழங்குடி நிலையில் எந்தவிதமான செல்வச்செழிப்பும் இல்லாத நிலையில் இருந்தது என்ற சித்திரத்தையே கொடுக்கிறார். நாகரீகம் என்பதெல்லாம் சில நகரங்களில் மட்டுமே இந்தியாவில் இருந்தன என்பது அவரது எண்ணம். அதற்கு பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளும் , பாதிரிமார்களும் எழுதிய மோசடியான பதிவுகளே அவருக்கு ஆதாரம். அவரது சீடர்களும் இதுகாறும் இந்த கருத்தையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் மார்க்ஸ் அவர்களின் மெஸையா- அவர் சொன்னால் அதில் பிழை இருக்காது என்பதே அவர்களின் அறிவியல்.

உண்மையில் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் உபரியை முழுக்க உறிஞ்சிக்கொண்டு சென்று இந்நாட்டு மக்களில் கால்வாசிபேரை அகதிகளாக பிஜித்தீவு முதல் கிழக்கிந்தியதீவுகள் வரை பூமியெங்கும் சிதறடித்தது என்பதே உண்மை.

திருவிதாங்கூர் மதுரை நாயக்கர் ஆட்சிக்கு கப்பம் கட்டிய சிற்றரசாகவே இருந்தது. அப்படியென்றால் மதுரையில் தஞ்சையில் இருந்த செல்வம் எப்படிப்பட்டதாக இருக்கும்! அவை எங்கே சென்றன! இருநூறாண்டுகளில் நாம் பிரிட்டிஷாருக்கு பறிகொடுத்த செல்வம் எவ்வளவு பெரிதாக இருக்கும்!

அந்தச்செல்வம் எப்படி வந்தது? திருவிதாங்கூர் எக்காலத்திலும் பிற நாடுகள் மேல் படை எடுத்ததில்லை. மார்த்தாண்ட வர்மா காலகட்டத்தில் அது கொல்லம் வரை உள்ள பகுதிகளை மீட்டுக்கொண்டது. காயக்குளம், கொச்சி அரசுகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தது. ஆனால் படையெடுப்பு கொள்ளை ஏதும் நிகழ்ந்ததில்லை. ஆக இது முழுக்க முழுக்க திருவிதாங்கூருக்குள் இருந்த பணம் தான்.

அன்றைய அமைப்பில் வரிவசூல் ஆறில் ஒருபங்குமுதல் நான்கில் ஒரு பங்குவரை இருந்திருக்கிறது. திருவிதாங்கூர் மிக மிக வளம் மிக்க பூமி. இங்கே இன்று வாழ்பவர்களில் கிட்டத்தட்ட கால்வாசிப்பேர் பல்வேறு காலங்களிலாக இங்கே வந்தவர்கள். பிரிட்டிஷ் ஆட்சிவந்து தாதுவருஷ பஞ்சம் வந்தபோது தொடர்ந்து நூறாண்டுக்காலம் தமிழ்நாட்டில் இருந்து குடியேற்றம் நிகழ்ந்ததைக் காணலாம். அவ்வாறு வந்தவர்களில் கலைஞர்களும் கைவினைஞர்களும் அதிகம்.

திருவிதாங்கூரின் வனப்பகுதிகள் எழுநூறுகளுக்கு பின்னர் பெரும் செல்வம் ஈட்டித்தர ஆரம்பித்தன. மலைவளங்களுக்கு சர்வதேச சந்தையில் பெரும் மதிப்பு இருந்தது . திருவிதாங்கூருக்குக் கொல்லம், அஞ்சுதெங்கு, ஆலப்புழா, குளச்சல் என முக்கியமான துறைமுகங்கள் இருந்திருக்கின்றன. சங்க காலம் முதலே தமிழ்நாட்டில் பணமாகவும் பொன்னாகவும் மாறியது – மாற்ற முடிந்தது, வனவளம் மட்டுமே. சர். சி பி ராமசாமி அய்யர் திருவிதாங்கூரை இந்தியாவுடன் சேர்க்கக்கூடாதென்று வாதாடிய காரணமே இது வளமான நிலம், இங்கிருந்து பணம் வரிவடிவில் மத்திய அரசுக்கு போகத்தான் செய்யும் , திரும்ப வருவது குறைவு என்பதனால்தான்.

இதேபோல கிட்டத்தட்ட 600 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருக்கும் ரகசியக் கல் அறை ஒன்று கொடுங்கல்லூர் பகவதி [கண்ணகி] ஆலயத்தில் உள்ளது. பிற ஆலயங்களிலும் இருக்கலாம். குறிப்பாக கொச்சி மன்னர்களுக்குரிய ஆலயங்களில்.

கடைசியாக, பத்மநாபசாமி கோயில் இன்னொரு அபாயகரமான சுட்டியை அளிக்கிறது. நம்முடைய ஆலயங்கள் இன்றாவது பாதுகாப்பாக இருக்கின்றனவா? இரு உதாரணங்கள். ஒன்று பத்மநாபசாமி கோயிலுக்கு நிகரான, அதைவிட பழைமையான திருவட்டார் ஆதிகேசவ சாமிகோயில் தமிழகத்தில் உள்ளது. அதுதான் உண்மையில் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வம். அந்தக்கோயிலும் மூன்று நிலவறைகள் இருந்தன. சுதந்திரம் பெற்றபின் தமிழக ஆலயநிர்வாகத்திற்குள் வந்ததுமே அவை திறக்கப்பட்டு சூறையாடப்பட்டன. தொடர்ச்சியாக இருபதாண்டுகளுக்கும் மேலாக நடந்த அந்தக்கொள்ளை அதில் சம்பந்தப்பட்ட ஒரு நம்பூதிரி மனசாட்சிக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டபோது 1991ல் வெளிவந்தது. பெரிய பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டது. அதன் பின் இன்றுவரை வழக்கு நாகர்கோயில் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ளது, இருபதாண்டுக்காலமாக!.

அன்று அந்த நிதியில் வைரக்கிரீடம் , வைரக்கவசம் , பொன் ஆபரணங்கள் இருந்தன என அந்த நம்பூதிரியே கடிதத்தில் சொல்லியிருந்தார். அவற்றின் மதிப்பு பத்துகோடிக்கு மேல் என்று மக்கள் சொன்னபோது அதை மிகைப்படுத்தல் என ‘சிந்தனையாளர்’கள் மறுத்தார்கள். [நான் அப்போது எழுதிய ஒரு கட்டுரைக்கு அப்படி ஓர் எதிர்வினை வந்ததை நினைவுகூர்கிறேன்.] அந்த செல்வங்களின் மதிப்பு என்னவாக இருந்தது, எங்கே போயிற்று என யாருக்கு தெரியும்? அந்த வழக்கையே நேர்மையாக அமைக்கவில்லை. அதன் குற்றவாளிகள் கிட்டத்தட்ட அனைவருமே வயதாகி இறந்துவிட்டனர். அவர்களின் வாரிசுகள் மாபெரும் கோடீஸ்வரர்களாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழ்கிறார்கள். அந்த வழக்குகளை ‘பைசல்’ செய்ய அன்றைய அறநிலை அமைச்சர் பெரும் பங்கு வகித்ததாக ஊரில் சொல்லப்படுகிறது.

திருச்செந்தூரில் இதேபோல பாண்டியர்காலம் முதலே உள்ள செல்வங்கள் நிலவறையில் இருந்தன. அறங்காவலர்களும் கோயிலதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து அவற்றைக் கொள்ளையடித்தார்கள் என்ற குற்றச்சாட்டும் விசாரணையும் முப்பதாண்டுக்காலம் முன்பு எழுந்து அப்படியே கரைந்து சென்றது. 1980ல் சுப்ரமணியபிள்ளை என்ற அதிகாரி கொலைசெய்யப்பட்டார். அதை பால் கமிஷன் என்ற அமைப்பு விசாரித்தது. என்ன நடந்தது மேற்கொண்டு?

சுப்ரமணியபிள்ளையின் உறவினர் ஒருவரைப் பத்து வருடம் முன்பு ஒரு ரயில்பயணத்தில் சந்தித்தேன். அங்கே திருட்டுப்போன நகைகள் உண்டியல்நகைகள் அல்ல, மன்னர்கால நகைகள், அவற்றின் மதிப்பு ‘நினைக்கமுடியாத அளவுக்கு பெரிசு’ என்றார். அங்கிருந்த கோயில்பட்டக்காரர்களும் அதிகாரிகளும் எல்லாருமே அதில் பங்குபெற்றார்கள் என்றார். சுப்ரமணியபிள்ளையின் உறவினர்கள் எல்லாருமே கடுமையாக மிரட்டப்பட்டு அமைதியானார்கள் என்றார்.

சிதம்பரம், அழகர்கோயில், மதுரை , திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் இதேபோல ரகசிய அறைகள் உண்டு என்ற பேச்சைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இனி இந்தக்கோயில்களை முழுக்க நம் அரசியல்வாதிகள் தோண்டி மல்லாத்திவிடுவார்கள். அங்கே என்ன இருந்தது என நாம் அறியப்போவதே இல்லை. அதைத்தடுக்கவும் கண்காணிக்கவும் நம்மிடையே எந்த மக்கள் அமைப்பும் இல்லை.

ஜெ

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s